Monday, September 6, 2010

Articles

friends
i m here posting articles from leading magazines and Newspapers which are creating awareness for public in right manner.

thank u
stay tuned

Television media in INDIA

இந்தியாவில் ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் அலைவரிசைகளை கேபிள் டி.வி. நிறுவனங்கள் மூலம் பெறுவதற்கு மூன்று வகையான கட்டணங்களைத் தீர்மானித்திருப்பதாக இந்திய தொலைத்தகவல் ஒழுங்காற்று ஆணையம் (TRAI)அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதில் வியப்பும் வருத்தமும் தருவது என்னவென்றால், முதல்வகை கட்டணமான மாதம் ரூ. 100-க்கு தூர்தர்ஷன் உள்பட 30 இலவச ஒளிபரப்புகள் வழங்கப்படும் என்று கூறியிருப்பதுதான். இலவசமாக ஒளிபரப்ப முன்வரும் தனியார் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் ஏன் ரூ. 100 செலுத்த வேண்டும் என்றால், அதற்கு அவர்கள் சொல்லக்கூடிய காரணம், இது கேபிள் டி.வி. நிறுவனங்கள் மற்றும் ஆபரேட்டர்களுக்கான வாடகை என்பதுதான்.

முதன்முதலில் தூர்தர்ஷன் ஒளிபரப்பான காலகட்டத்தில், ஒருமுறைச் செலவாக ஆன்டெனா மட்டும் வாங்கினால் போதும், ஒளிபரப்பை இலவசமாகப் பார்க்க முடிந்தது. இந்த 20 ஆண்டுகளில் செயற்கைக் கோள்களும் தொழில்நுட்பமும் முன்னேற்றம் கண்டுவிட்டது. இனியும்கூட, இலவச அலைவரிசைகளையும் மாத வாடகை செலுத்தித்தான் பார்க்க வேண்டும் என்ற நிலையை அரசே உருவாக்குவது சரியாக இருக்குமா? இலவச அலைவரிசைகள் அனைத்தையும் சிறு "செட்-டாப்' கருவி மூலம் எந்தவொரு குடும்பமும் இந்தியாவின் எந்தவொரு மூலையிலும் இலவசமாகக் காண முடியும். இதற்கான கருவிகளை மிகக் குறைந்த விலையில் அளிக்க சிறுதொழில்கூடங்கள் தயார். இது நடைமுறைக்கு வரவேண்டும் என்றால், இலவசமாக ஒளிபரப்ப முன்வரும் அனைத்துத் தனியார் அலைவரிசைகளையும் அரசாங்கமே இந்த நிறுவனங்களிடம் குறிப்பிட்ட கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு ஒளிபரப்பினால்தான் முடியும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு சில ஆயிரம் கோடி ரூபாய் வருவாயும் கிடைக்கும்.

ஒரு குடும்பம் தன் வீட்டுக்கு இலவச ஒளிபரப்புகள் மட்டுமே போதும் என்று விரும்பினால், இதற்கான ஒருமுறைச் செலவை மட்டுமே செய்துவிட்டு, முதன்முதலில் தூர்தர்ஷன் ஒளிபரப்பான காலகட்டத்தில் எப்படி மாத வாடகை பற்றிய கவலையில்லாமல் பார்த்தார்களோ அதேபோன்று பார்க்கச் செய்வதற்கான அனைத்துத் தொழில்நுட்பமும், அரசு அதிகாரமும் இருக்கும்போது, ஏன் இலவச அலைவரிசைகளுக்கும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டரைச் சார்ந்திருக்கும்படியான ஒரு சூழலை தொலைத்தகவல் ஒழுங்காற்று ஆணையமே உண்டாக்குகிறது?

தற்போதுள்ள சூழலில் டிடிஎச் தொழில்நுட்பம் நடைமுறையில் இருந்தாலும், இலவச அலைவரிசை (தூர்தர்ஷன் உள்பட) மட்டுமன்றி, கட்டண அலைவரிசைகளையும் கேபிள் டி.வி. நிறுவனங்கள் அல்லது அவர்களைச் சார்ந்து செயல்படும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாகத்தான் பெறமுடியும் என்கிற நிலைமை இருக்கிறது. இதனால் தூர்தர்ஷனைக்கூட ஆபரேட்டர்கள் தயவில்தான் பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்துள்ளது.

உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் கேபிள் டி.வி. நிறுவனங்களிடமிருந்து ஒளிபரப்பை வாங்கி, கம்பிகள் மூலம் வீடுகளுக்கு அளித்து வருகிறார்கள். இவர்களது சங்கம் போராட்டம் நடத்தினால், தாங்கள் சார்ந்துள்ள கேபிள் டி.வி. நிறுவனத்தின் ஒளிபரப்புகளை மட்டுமன்றி, இலவச ஒளிபரப்புகளைக்கூட பார்க்க முடியாதபடி இருட்டடிப்புச் செய்துவிடுகிறார்கள். இவர்கள் தொழில்நுட்பக் கருவிகள் நிறுவியுள்ள இடத்தில் மின்தடை என்றால், அந்தப் பகுதியில் உள்ள எந்த வீட்டுக்கும் ஒளிபரப்பு இருக்காது. இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய அரசு வேடிக்கை பார்த்தால்கூடப் பரவாயில்லை, அவர்களுக்குத் துணைநிற்கிறதே, இதுதான் அவலத்திலும் அவலம்.

தமிழ்நாட்டில் 2 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 10 சதவீதம் போலி அட்டைகள் என்று அரசு சொல்கிறது. ஆக, தமிழ்நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1.80 கோடி என்று வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ. 200 வீதம் (டிடிஎச் என்றாலும், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர் என்றாலும்) கட்டணம் செலுத்த நேரிடும் என்றால், ரூ.360 கோடி கேபிள் நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களுக்குப் போகிறது. இதில் தொழில்நுட்பத்தைத் தவிர உடல்உழைப்போ, அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களோ கிடையாது. ஆனால் லாபமோ பல நூறு மடங்கு! இதற்காக அந்தந்த உள்ளாட்சிகளுக்கு கேபிள் ஆபரேட்டர்கள் செலுத்தும் வரியைக் கணக்கிட்டால் மிகமிகச் சொற்பம்.

மேலும், இலவச அலைவரிசை, கட்டண அலைவரிசை ஆகியவற்றில் யார் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நிபந்தனைகள் வெளிநாடுகளில் இருக்கிறது. இந்தியாவில் அத்தகைய வேறுபாட்டை உருவாக்கவே இல்லையே! கட்டணம் செலுத்திப் பார்க்க வேண்டிய அலைவரிசைகளைப் பார்க்க விரும்புவோர் தாராளமாக அதற்கான கட்டணத்தைச் செலுத்தி, தனியார் கேபிள் டி.வி. நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலம் ஒளிபரப்பைப் பெறட்டும். அதைப் பற்றி யாரும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால், மாத வாடகை செலுத்த மனமின்றி, வழியின்றி, இலவச அலைவரிசைகளை மட்டுமே விரும்பும் குடிமக்களின் நியாயமான உரிமையைக் கூட ஏன் அரசு நிலைநாட்டக்கூடாது. சட்டம் இயற்றிப் பறிக்கப் பார்க்கிறதே, ஏன்?

தமிழ்நாட்டில் நல்லதொரு முன்னுதாரணமாக அரசு கேபிள் என உருவாயிற்று. ஆனால், அது செயல்படும் முன்பாகச் செயலிழந்தது என்பதோடு, அதைச் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டிய அதிகாரி உமாசங்கர் மீது அரசும் தீவிரமாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் நடைமுறை உண்மை.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வால்வு ரேடியோ (வானொலி பெட்டி) வாங்கியவர்கள் உள்ளூர் தபால் அலுவலகத்தில் அதற்காக ஆண்டுதோறும்- ஒலிபரப்பைக் கேட்டு அனுபவிப்பதற்காக-உரிமக் கட்டணம் செலுத்தியாக வேண்டும் என்றிருந்தது. அதற்காக தனி பாஸ் புத்தகம் கொடுக்கப்படும். தொழில்நுட்பம் முன்னேற்றம் கண்டு, டிரான்ஸ்சிஸ்டர் நடைமுறைக்கு வந்தபோது, வால்வு ரேடியோக்களும் காணாமல் போயின, கட்டணமும் மறைந்தது. இப்போது வானொலியை யார் வேண்டுமானாலும் கேட்கலாம், இலவசம்தான். தற்போது பண்பலை ஒலிபரப்பில் பல தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அவையும் இலவசம்தான்.

ஒளிபரப்புத் துறையில் தூர்தர்ஷன் நுழைந்தபோது, வெறும் ஆன்டெனா செலவு மட்டும்தான். ஒளிபரப்புக்குப் பணம் கிடையாது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட நிலையில், கட்டணச் சேனல்களில் விளம்பரங்கள் இருக்கக் கூடாது. விளம்பரங்கள் உள்ள சேனல்கள் இலவசமாக, முற்றிலும் இலவசமாக மக்களுக்குத் தரப்பட வேண்டும். இதில் இடைத்தரகர்களுக்கு இடமிருக்கக் கூடாது.

இலவச அலைவரிசைகள் அனைத்தையும் யார் தயவும் இல்லாமல் இலவசமாகப் பார்க்க வகை செய்வதுதான் அரசின் கடமையாக இருக்க முடியும்.

Need for I.J.S

மாவட்ட ஆட்சியர் பதவியில் இருப்பவர் இந்திய ஆட்சிப் பணி ​(ஐ.ஏ.எஸ்.)​ அதிகாரியாகவும்,​​ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐ.பி.எஸ்.​ அதிகாரியாகவும்,​​ மாவட்ட வன அலுவலர் ஐ.எப்.எஸ்.​ அதிகாரியாகவும் இருக்கும்போது,​​ நீதிபதிகள் மட்டுமே அத்தகைய வரையறைக்குள் வருவதேயில்லை.​ இந்திய நீதித்துறைப் பணிக்கென ​(ஐ.ஜே.எஸ்.)​ தனியாகத் தேர்வு நடத்தி,​​ மாவட்ட நீதிபதிகளைத் தேர்வு செய்ய வேண்டும் என்கிற மத்திய அரசின் திட்டம் இன்னமும் கிடப்பிலேயே போடப்பட்டிருக்கிறது.13-வது நிதிக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பான கூட்டம் ​ வடஇந்திய மண்டலத்தில் 6 மாநில அதிகாரிகளுடன் மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தலைமையில் புதுதில்லியில் சென்ற வாரம் நடைபெற்றது.​ ​ இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,​​ "நீதித்துறைப் பணிக்கு அகில இந்திய அளவில் தேர்வு நடத்தும் முடிவுக்கு மாநில அரசுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை' என்று கூறினார்.​ ​நாடாளுமன்ற நிலைக்குழு இத்தகைய அகில இந்திய நுழைவுத் தேர்வை நீதித்துறையும் நடத்தி,​​ மாவட்ட நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்கிற பரிந்துரையை 2006-ம் ஆண்டு மே மாதம் அவையில் வைத்தது.​ சட்ட அமைச்சகம் இந்த நடைமுறையை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியது.​ ஆனால் இதுவரை செய்யப்படாமலேயே இருக்கிறது.மாநில அரசுகள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்பதே இதற்குக் காரணம்,​​ அதைத்தான் அமைச்சரும் கருத்தொற்றுமை ஏற்படவில்லை என்று வேறுமாதிரியாகக் கூறியுள்ளார்.​ மாவட்ட நீதிபதி நியமனங்களை தன்வசமே வைத்திருக்க மாநில ஆளும்கட்சிகள் விரும்புகின்றன.எந்தக் கட்சி என்றபோதிலும்,​​ ஒவ்வொரு கட்சிக்கும் வழக்குரைஞர் அணி என்று ஒன்று இருக்கிறது.​ ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடனே,​​ மாவட்ட அளவிலும்,​​ மாநில அளவிலும் அரசு வழக்குரைஞர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அனைவருமே ஆளும்கட்சியின் வழக்குரைஞர் அணியில் இடம்பெற்றிருப்பார்கள் என்பதைச் ​ சொல்லித்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நிலைமை இல்லை.​ இதேபோன்று மாவட்ட நீதிபதி பதவிகளிலும் தங்கள் கட்சி சார்புள்ள நபர்களே இருக்க வேண்டும் என்று ஆட்சிக்கு வரும் கட்சிகள் விரும்புகின்றன.​ இதேபோல ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ அதிகாரிகளும் தங்கள் ஆள்களாக இருக்க வேண்டும் என்கிற விருப்பமும் ஆளும் கட்சிகளிடம் இருக்கிறது.​ குரூப்-1 தேர்வு மூலம் பதவிக்கு வந்த அதிகாரிகளை ஐ.ஏ.எஸ்.,​​ ​ ஐ.பி.எஸ்.-ஆக பதவி உயர்வு அளிக்க அரசு பரிந்துரைக்கும் பெயர்களே அதற்கு சாட்சிகளாகும்.இவ்வாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்து,​​ ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ இடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களுக்குப் பதவி உயர்வு அளிப்பதைக் காட்டிலும்,​​ நீதித்துறையில் மட்டுமாகிலும் பணிநியமனம் செய்யும் அதிகாரத்தை தங்கள் வசமே வைத்திருக்க மாநில அரசுகள் விரும்புவது வெளிப்படை.​ ​மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான தேர்வு நடத்தும் தமிழகஅரசின் அறிவிப்பாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்பு தடை விதித்துள்ளதும்,​​ இந்த வழக்கின் காரணங்களும் மறுசிந்தனைக்கு உரியவை.மாவட்ட நீதிபதிகள் பணிக்கான தகுதிகளில் ஒன்றாக,​​ விண்ணப்பதாரர் வழக்குரைஞராக எத்தனை ஆண்டுகள் பணியாற்றினார் என்கிற அனுபவத்துக்கு முன்னுரிமை அளிப்பதோடு,​​ நேர்காணலில் 12.5 விழுக்காடு மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரையறை செய்திருக்கிறது.​ தமிழக அரசின் அறிவிப்பாணையில்,​​ அனுபவம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.​ நேர்காணலுக்கு 25 விழுக்காடு மதிப்பெண் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு,​​ தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.​ ​இத்தகைய விதிமுறை மீறல்கள் யதேச்சையாக நடந்தவை என்று கருதிவிட முடியாது.​ நிச்சயமாக,​​ இவை தெரிந்தே மீறப்படும் விதிமுறைகள்தான்.​ இவற்றைப் பார்க்கும்போது,​​ இந்தியா முழுவதும் அகில இந்திய போட்டித் தேர்வுகள் மூலமே மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்கிற கருத்தினைப் புரிந்துகொள்ள முடிகிறது.​ இதனால்,​​ தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பிற மாநிலங்களில் நீதிபதியாகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைப்பதோடு,​​ தமிழ்நாட்டிலும் பிற மாநிலத்தவர் நீதிபதிகளாக வர முடியும்.​ ​வேறு மாநிலத்துக்காரர்களான ஐ.ஏ.எஸ்.,​​ ஐ.பி.எஸ்.​ அதிகாரிகளும்கூட ஆட்சியாளர்களுடன் சேர்ந்துகொண்டு ஊழல் செய்யத்தானே செய்கிறார்கள் என்று சொல்லலாம்.​ அதற்கான வாய்ப்புகளே இல்லை என்று சொல்லிவிட முடியாது,​​ ஆனால்,​​ குறைவாக இருக்கிறது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.​ மேலும்,​​ போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுகிறார்கள்;​ நிச்சயமாகத் தகுதி இல்லாமல் வெற்றிபெற முடியாது என்று நம்பலாம்.காவல்துறையும் நீதித்துறையும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டாலும்,​​ இதனால் எள்ளளவும் பாதிப்பு இல்லாமல்,​​ காப்பீடு வழக்குகள்,​​ விபத்து வழக்குகளில் "காவல் நிலையம்-வழக்குரைஞர்-​ நீதித்துறை' கூட்டணி ஒன்று தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறது என்பதைப் பார்க்கும்போது,​​ மாவட்ட நீதிபதிகள் அனைவரும்,​​ மத்திய தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுபவராகவே இருக்க வேண்டும் என்பதன் அவசியம் மேலும் உறுதிப்படுகிறது.​ ஐ.ஜே.எஸ்.​ அவசியம் தேவை!
Colloquial Tamil: The Complete Course for Beginners (Colloquial Series)Tamil for Beginners